உங்கள் ஆரோக்கியத்தை உங்கள் பாதங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்

உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட நாம் கவனித்தால் பல பெரிய நோய்களை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். குறிப்பாக நமது பாதங்கள் உடலின் உட்புற ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல்படுகின்றன. பாதங்களில் தோன்றும் சில அறிகுறிகள் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான தீவிர பாதிப்புகளின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்
பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கம் ‘புளூயிட் ரிடென்ஷன்’ (Fluid Retention) எனப்படும் நீர் தேக்கத்தினால் உண்டாகிறது. இது பெரும்பாலும் இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைக் குறிக்கிறது. மேலும் உடலில் புரதம், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் சத்துக்களின் குறைபாடும் இத்தகைய வீக்கத்திற்கு காரணமாகிறது. உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும், ஓய்வெடுக்கும்போது கால்களைச் சற்று உயர்த்தி வைப்பதன் மூலமும் இந்த வீக்கத்தைக் குறைக்கலாம்.
பாதம் மற்றும் குதிங்கால் வலி
நடைப்பயிற்சியின் போது வலி அதிகரித்து ஓய்வெடுக்கும்போது குறைந்தால் அது ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்பு முறிவுக்கான (Stress Fracture) அறிகுறியாக இருக்கலாம். தசைகளில் ஏற்படும் பிடிப்பு மற்றும் மூட்டு வலிக்கு மெக்னீசியம் குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். நரம்பு கோளாறுகள் அல்லது பாதங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லாததாலும் இத்தகைய வலி ஏற்படுகிறது.
மரத்துப்போதல் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு
பாதங்களில் அடிக்கடி மரத்துப்போதல் அல்லது ஒருவிதமான ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவது நரம்பு பாதிப்பின் (Peripheral Neuropathy) அறிகுறியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக நரம்புகள் பாதிக்கப்படும்போது இந்த உணர்வு உண்டாகிறது. இது தவிர வைட்டமின் பி-12 மற்றும் வைட்டமின் இ குறைபாடும் நரம்பு மண்டலத்தைச் சீர்குலைக்கக்கூடும்.
தசைப்பிடிப்பு மற்றும் கால் வலி
அடிக்கடி கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அது உடலில் நீரிழப்பு (Dehydration) இருப்பதைக் குறிக்கிறது. மெக்னீசியம் போன்ற தாதுக்களின் குறைபாடும் இதற்கு ஒரு காரணமாகும். தசை மற்றும் நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்குத் தேவையான சத்துக்கள் குறையும்போது இத்தகைய வலி ஏற்படுகிறது. போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தூங்குவதற்கு முன் கால்களை மென்மையாக மசாஜ் செய்வது இதற்குத் தீர்வாகும்.
பாதங்கள் குளிர்ந்து போதல்
வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால் அது இரத்த ஓட்டக் குறைபாட்டைக் குறிக்கிறது. தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சினைகள் அல்லது இரும்புச்சத்து குறைபாட்டினாலும் கை, கால்கள் குளிர்ந்து போகலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் இதனைச் சரிசெய்ய முடியும்.
குதிங்கால் வெடிப்பு
குதிங்கால் வெடிப்பு என்பது வெறும் வறண்ட சருமத்தினால் மட்டும் ஏற்படுவதில்லை. இது வைட்டமின் ஏ, துத்தநாகம் (Zinc) மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாட்டையும் காட்டுகிறது. சர்க்கரை நோய் மற்றும் எக்ஸிமா (Eczema) போன்ற தோல் வியாதிகள் இந்த வெடிப்புகளை மேலும் தீவிரமாக்குகின்றன.
ஒரு பார்வையில்
- பாத வீக்கம் இதயம் அல்லது சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
- தொடர்ந்து ஏற்படும் குதிங்கால் வலி எலும்புத் தேய்மானத்தைக் குறிக்கலாம்.
- பாதங்கள் மரத்துப்போதல் சர்க்கரை நோய் அல்லது நரம்பு பாதிப்பின் அடையாளம்.
- தாதுக்களின் குறைபாடு மற்றும் நீரிழப்பினால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.
- தைராய்டு அல்லது இரத்த ஓட்டக் குறைபாட்டினால் பாதங்கள் குளிர்ச்சியடைகின்றன.
- சத்து குறைபாடு மற்றும் முறையற்ற காலணிகளால் குதிங்கால் வெடிப்பு உண்டாகிறது.