இந்திய சுகாதாரத்துறையில் அதிரடி மாற்றங்கள் மருத்துவ சுற்றுலாவிற்கு முக்கியத்துவம்

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 10% உயர்த்தப்பட்டு, 1.06 லட்சம் கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவ சுற்றுலாவின் மையமாக மாற்றவும் ஐந்து மண்டல மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பயோபார்மா திட்டத்திற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று புதிய நைப்பர் (NIPER) கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயிரம் மருத்துவப் பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டு மருந்துகளின் தரம் சர்வதேச நிலைக்கு உயர்த்தப்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகத்திற்கு 20% கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணியாளர்களின் திறனை மேம்படுத்த முதன்முறையாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 10,000 புதிய நிபுணர்கள் உருவாக்கப்படுவார்கள். ஆயுஷ்மான் பாரத் மற்றும் தேசிய சுகாதார திட்டங்களுக்கான நிதி அதிகரிப்பு, சாமானிய மக்களுக்கான மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.