இந்தியாவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கடும் எச்சரிக்கை

இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி கூறிய புகார்களை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. தனது சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்களை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடந்த சில சம்பவங்களை வைத்து பாகிஸ்தான் அரசியல் செய்ய முயல்வதை ஏற்க முடியாது. அண்டை நாட்டின் இந்த விரக்தி கலந்த கருத்துக்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் தேவையற்ற முயற்சி என்று இந்தியா காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளது.