ஆபரேஷன் சிந்தூர் பாதிப்புகளை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் ராவல்பிண்டியிலுள்ள நூர் கான் விமானப்படை தளம் சேதமடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில், 36 மணி நேரத்தில் சுமார் 80 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அதில் ஒன்று ராணுவ நிலைகளைத் தாக்கியதில் வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் தாக்குதலால் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7-ஆம் தேதி இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மேக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களும் நூர் கான் தளம் உட்பட நான்கு முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை உறுதிப்படுத்தின. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஏற்கனவே ஏவுகணை தாக்குதல்களை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சரின் இந்த வெளிப்படையான வாக்குமூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.