அறுவை சிகிச்சைக்கு பின் தாய்மொழியை மறந்த சிறுவன் வெளிநாட்டு மொழியில் பேசிய அதிசய சம்பவம்

நெதர்லாந்தில் கால்பந்து விளையாடும் போது முழங்காலில் காயமடைந்த 17 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தவுடன் அந்த சிறுவன் தனது தாய்மொழியான டச்சு மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தொடங்கினான். தான் அமெரிக்காவில் வசிப்பதாக கூறிய அவன் தனது பெற்றோரை அடையாளம் காணவும் தடுமாறினான். மருத்துவ உலகில் மிகவும் அரிதாக கருதப்படும் ‘ஃபாரென் லாங்குவேஜ் சின்ட்ரோம்’ (Foreign Language Syndrome) பாதிப்பால் இது நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை உலக அளவில் இத்தகைய பாதிப்புகள் ஒன்பது முறை மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளன. சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தனது நண்பர்களை சந்தித்தபோது அந்த சிறுவன் மெதுவாக டச்சு மொழியை மீண்டும் பேசத் தொடங்கினான். பூரண குணமடைந்த நிலையில் அவன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினான். டீனேஜ் வயதினரிடையே இத்தகைய பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.