அமெரிக்காவின் தற்காலிக அனுமதியால் ரஷ்யாவிடம் இருந்து 3 கோடி பேரல் கச்சா எண்ணெயை வாங்கியது இந்தியா

ஈரான் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து சுமார் 3 கோடி பேரல் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளன. அமெரிக்கா வழங்கிய 30 நாள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி இந்தியன் ஆயில் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தலா 1 கோடி பேரல்களை வாங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை விலையை விட கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த அவசர இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு பொறுப்பான நாடு என்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீராக வைத்திருக்கவே இந்த சலுகை வழங்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கிய இந்தியா சமீபத்தில் அமெரிக்க அழுத்தத்தால் இறக்குமதியை குறைத்திருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த அனுமதியால் சிங்கப்பூர் வழியாக இந்திய துறைமுகங்களை நோக்கி பல எண்ணெய் கப்பல்கள் வரத்தொடங்கியுள்ளன.