விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது மத்திய அரசு அதிரடி

உள்நாட்டு விமானப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி விமானங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதத்தை முன்பதிவு செய்ய பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜன்னல் ஓர இருக்கைகள் மற்றும் முன்பக்க இருக்கைகளுக்கு தனியார் நிறுவனங்கள் கூடுதல் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றாகப் பயணிப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் அருகருகே இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்.
விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கான தெளிவான கொள்கைகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உரிமைகள் குறித்த தகவல்கள் விமான நிலையங்கள் மற்றும் இணையதளங்களில் உள்ளூர் மொழிகளில் தெளிவாக இடம்பெற வேண்டும். தினமும் 5 லட்சம் பயணிகள் பயணிக்கும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில், பயணிகளின் வசதியையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யவே இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.