விடாத பப்ஜி மோகம்: தூக்கமில்லாமல் விளையாடிய 22 வயது இளைஞன் பரிதாப பலி!

மீரட்: மொபைல் கேமிங் மீதான அதீத ஆர்வம் ஒரு இளைஞனின் உயிரைப் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் மீரட்டில் நடந்துள்ளது. பப்ஜி (PUBG) விளையாடிக்கொண்டிருந்தபோது ரத்த அழுத்தம் (Blood Pressure) அபரிமிதமாக உயர்ந்து, மூளையில் நரம்பு வெடித்ததால் முகமது கைஃப் என்ற 22 வயது இளைஞன் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு மீரட்டின் கைர் நகரைச் சேர்ந்த கைஃப், தனது அறையில் ஹெட்செட் அணிந்து மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதித்தபோது, கைஃப்பின் ரத்த அழுத்தம் 300-க்கும் அதிகமாக இருந்தது தெரியவந்தது. நிலைமை மோசமடைந்ததால் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். கடுமையான மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் ரத்தப்போக்கு (Brain Hemorrhage) ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைஃப் கடந்த நான்கு மாதங்களாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து வந்த அவர், பின்னர் இரவு முழுவதும் தூங்காமல் கேமிங்கில் மூழ்கியுள்ளார். பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி விளையாடிய அந்த இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.