‘விசில்’ அரசியல் செல்லாது: சி.வி. சண்முகம் அதிரடி எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திண்டிவனம் அதிமுகவின் கோட்டை
கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “2001-ம் ஆண்டு முதல் நாம் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். வானூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் திண்டிவனத்திலும் நாம் தொடர் வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருமுறை நம்முடைய கவனக்குறைவால் தோல்வியைத் தழுவினோம். ஆனால், திண்டிவனம் ஒரு கடினமான தொகுதி என்ற தவறான பிம்பம் உள்ளது. மக்கள் நமக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர், நாம்தான் தேவையில்லாத அச்சத்தில் இருக்கிறோம்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
திமுக கூட்டணியில் பிளவு
திமுகவின் தற்போதைய நிலை குறித்து விமர்சித்த அவர், “அதிமுக பிளவுபட்டுவிட்டதாக திமுக கூறி வந்தது. ஆனால் இன்று அதிமுக, பாமக மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது. மாறாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறத் துடிக்கின்றன. அவர்களைத் தக்கவைக்க திமுக கெஞ்சிக் கொண்டிருக்கிறது. எது செய்தாலும் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி” எனத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் ஊழல்
தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம், “எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் அறிக்கை விடுகின்றனர். மாணவர்களின் பைகளில் கஞ்சா இருக்கிறது. தமிழகமே போதைப்பொருட்களின் பிடியில் சிக்கியுள்ளது. ஆனால், இதைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது” என்று சாடினார்.
கமல்ஹாசன் மற்றும் ‘விசில்’ அரசியல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கடுமையாகச் சாடிய அவர், “சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போன கமல்ஹாசன், இப்போது திமுகவிடம் சீட்டுக்காகப் பிச்சை எடுக்கிறார். சினிமாவில் விசில் அடிக்கலாம், பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம்; ஆனால் அந்த விசில் சத்தம் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. அவ்வப்போது முளைக்கும் இது போன்ற காளான்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பதவி சுகத்திற்காகச் சிலர் எங்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் என்றும் இந்த இயக்கத்தை விட்டு நகர மாட்டார்கள்” என்றார்.
தொண்டர்களுக்கு அழைப்பு
“தேர்தல் களம் நமக்குச் சாதகமாக உள்ளது. ஆமை – முயல் கதையைப் போல நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. தமிழகத்திலிருந்து தீய சக்தியை விரட்டவே எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அரியணையில் ஏற்ற இளைஞர்களும் தொண்டர்களும் முழு வீச்சில் களப்பணியாற்ற வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாக ஆட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.