வாட்ஸ்அப் பயனர்களே உஷார்: ஒரு மெசேஜ் உங்களை சிறைக்கு அனுப்பலாம்!

வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களைச் சரிபார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிரும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான். நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு உங்களைச் சைபர் குற்றவாளியாக மாற்றி சிறைக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
பரப்பப்படும் வதந்திகள், சமூக அமைதியைக் குலைக்கும் தூண்டுதல் செய்திகள் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக, ஆபாச வீடியோக்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் மற்றும் போலி லாட்டரி தொடர்பான மோசடி செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.
டிஜிட்டல் உலகில் உங்கள் தனிப்பட்ட சாட்டுகள்கூட சட்டப்பூர்வ ஆதாரங்களாகக் கருதப்படலாம். எனவே, எந்தவொரு தகவலையும் மற்றவர்களுக்கு ‘ஃபார்வேர்ட்’ செய்யும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். விழிப்புணர்வுடன் செயல்படத் தவறினால், சிறைத்தண்டனை அல்லது அபராதத்தைத் தவிர்க்க முடியாது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
நீங்கள் பகிரும் ஒரு மெசேஜ் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால், அதற்கு நீங்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.