மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தம் ஈரானின் 10 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது அமெரிக்கா

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க ஈரான் முன்வைத்த 10 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தனது நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக ஈரான் கொண்டாடி வருகிறது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவைத் தங்கள் நிபந்தனைகளுக்கு அடிபணியச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 10 அம்சத் திட்டத்தில் யுரேனியம் செறிவூட்டல் அனுமதி, பொருளாதாரத் தடைகள் நீக்கம், ஈரானுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் போன்ற முக்கியக் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைக்கவும், ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிக்கவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்த நிபந்தனைகளைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தாலும், கள நிலவரம் இன்னும் பதற்றமாகவே உள்ளது. டொனால்ட் டிரம்பின் அறிவிப்பையும் மீறி, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதற்கான முழுமையான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.