மும்பை வொர்லியில் அதிரடி! கழிவுநீர் சுத்திகரிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மும்பை வொர்லி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக (STP) ஒதுக்கப்பட்ட நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக நிறுத்தவும், அவற்றை இடிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் (SRA) செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள் கிரிஷ் எஸ். குல்கர்னி மற்றும் ஆர்த்தி எஸ். சாத்தே ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது பயன்பாட்டிற்கான நிலத்தில் எவ்வாறு தற்காலிக குடியிருப்புகள் (Transit Camps) கட்ட அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியது.
மும்பை மாநகராட்சி (BMC) இந்த நிலம் பொது பயன்பாட்டிற்கு உரியது என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தும், SRA அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தியது கண்டறியப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்படும் “திட்டமிடப்பட்ட சதி” என்று நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
மேலும், மாநகராட்சியின் முக்கிய கடிதங்களை மறைத்த பொறியாளர்களை ஒரு வாரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்ய SRA தலைமை நிர்வாக அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக காவல் துறை விசாரணை மற்றும் எஃப்ஐஆர் (FIR) நடவடிக்கை தொடரும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.