பெற்ற தாயின் சடலத்துடன் 20 நாட்கள் வாழ்ந்த மகன் ஜஷ்பூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குன்குரி பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து 65 வயதான சபீனா கால்கோ என்பவரின் சிதைந்த சடலத்தை போலீசார் மீட்டனர். கடந்த 20 நாட்களாக அவரது 25 வயது மகன் பிரவீன் கால்கோ தனது தாயின் சடலத்துடன் அதே அறையில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் துர்நாற்றம் வீசுவதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த கொடூர நிலை கண்டறியப்பட்டது.
விசாரணையில் சபீனா கடந்த டிசம்பர் 6 ஆம் தேதியே உடல்நலக்குறைவால் உயிரிழந்தது தெரியவந்தது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிரவீன் யாரிடமும் கூறாமல் சடலத்துடன் தங்கியிருந்துள்ளார். போலீசார் தற்போது பிரவீனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதில் ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.