பூமியை நோக்கி வேகமாக வரும் நாசாவின் செயலிழந்த செயற்கைக்கோள் விண்வெளியில் புதிய பதற்றம்

நாசாவின் 14 ஆண்டுகள் பழமையான வான் ஆலன் ப்ரோப்-ஏ ஆராய்ச்சி செயற்கைக்கோள் தற்போது மணிக்கு சுமார் 28,968 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 2012 இல் கதிர்வீச்சு வளையங்களைக் கண்காணிக்க ஏவப்பட்ட இந்த விண்கலம் 2019 இல் எரிபொருள் தீர்ந்ததால் செயலிழந்தது. தற்போது புவிஈர்ப்பு விசை மற்றும் வளிமண்டல உராய்வு காரணமாக அதன் சுற்றுப்பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கி இறங்கி வருவது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டலத்திற்குள் நுழையும் போது ஏற்படும் கடுமையான உராய்வினால் செயற்கைக்கோளின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகிவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் சில கடினமான பாகங்கள் பூமியில் விழ வாய்ப்புள்ள போதிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு விண்வெளியில் அதிகரித்து வரும் குப்பைகள் குறித்த கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது இது எதிர்காலத்தில் மற்ற விண்கலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்.