பிக் பாஷ் லீக்கில் இந்திய வம்சாவளி வீரர் ஜார்சிஸ் வாடியா அதிரடி பேட்டிங்

பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் இந்திய வம்சாவளி வீரர் ஜார்சிஸ் வாடியா அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது களமிறங்கிய இவர், வெறும் 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்து மிரட்டினார். குறிப்பாக ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 24 ரன்களை திரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இருப்பினும் அடிலெய்டு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2001-ல் பிறந்த ஜார்சிஸ் வாடியா ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்பு இந்தியாவின் வடோதராவில் கிரிக்கெட் விளையாடினார். அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 19 வயதுக்குட்பட்டோர் திட்டத்தின் மூலம் வளர்ந்த இவர், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இரண்டாவது போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்திய வாடியா, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய வீரராக உருவெடுத்துள்ளார்.