பாம்பாக மாறியதாக நாடகமாடி காதலனுடன் ஓட்டம் இளம்பெண்ணின் பகீர் பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையாவில் இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமாவதற்கு முன்பு தனது படுக்கையில் பாம்பின் சட்டை, குங்குமம் மற்றும் வளையல்களை வைத்துவிட்டு சென்றார். இதைக் கண்ட உறவினர்கள் அவர் ‘இச்சாதாரி நாகினி’யாக மாறிவிட்டதாகக் கருதி அச்சமடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாயமான பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உண்மையை வெளிப்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் போலீசாரை திசைதிருப்பவே தான் பாம்பின் சட்டையை வைத்து நாடகமாடியதாக அவர் ஒப்புக்கொண்டார். தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவர் வீட்டாருக்கு எந்தத் தொந்தரவும் தர வேண்டாம் என்றும் அவர் வீடியோவில் கேட்டுக்கொண்டார். மூடநம்பிக்கையை ஆயுதமாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்தத் திருமண நாடகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.