பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது
February 1, 2026

பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியா, பாகிஸ்தானின் இந்த வாதங்கள் முற்றிலும் அபத்தமானது என்றும், எவ்வித ஆதாரமும் அற்றவை என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு தோல்விகளை மறைக்கவே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தியா மீது பழி போடும் உத்தியை அந்நாடு கையாள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறான பரப்புரைகளை இந்தியா முழுமையாக நிராகரிப்பதுடன், தனது தோல்விகளை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.