நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாக அதிரடி மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தயார் நிலையில் உள்ளது. ஐபிஎல் 2026-க்கு முன்பாக நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் இந்திய அணியை இளம் வீரர் ஷுப்மன் கில் வழிநடத்துவார் என்றும், கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது.
காயத்திலிருந்து மீண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்திய முகமது ஷமி நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணியில் இணையவுள்ளார். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதால் ஷமியின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், அதிரடி ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ராகுல் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.