தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் மெச்சூரிட்டியில் 380 சதவீத லாபம்

2017-18 ஆம் ஆண்டின் இறையாண்மை தங்கப் பத்திர (SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், அதன் முதிர்வு காலத்தில் எதிர்பாராத அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இறுதி மீட்பு விலையின்படி, இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 380 சதவீத முழுமையான லாபம் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஒரு கிராம் 2,816 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இந்த பத்திரத்தின் விலை, தற்போது 13,563 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வே இந்த லாபத்திற்கு முக்கிய காரணமாகும்.
விலை உயர்வு மூலம் கிடைத்த ஒரு யூனிட்டிற்கு 10,700 ரூபாய் லாபம் தவிர, முதலீட்டாளர்களுக்கு ஆண்டுதோறும் 2.5 சதவீத நிலையான வட்டியும் வழங்கப்பட்டுள்ளது. பிஸிக்கல் தங்கத்தை விட பாதுகாப்பான மற்றும் தூய்மை குறித்த கவலை இல்லாத இந்த அரசு முதலீட்டுத் திட்டம், முதலீட்டாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முதிர்வுத் தொகை நேரடியாக முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டிற்கு தங்கப் பத்திரங்களே சிறந்த வழி என்பதை இந்த அபரிமிதமான வளர்ச்சி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.