டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் – புள்ளிவிவரங்களில் கெத்து காட்டுவது யார்?

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் இந்தியா-பாகிஸ்தான் மோதலின் மீதுதான் உள்ளது. வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் இந்தப் போட்டி நடைபெற வேண்டிய சூழலில், பாகிஸ்தான் அரசின் புறக்கணிப்பு முடிவால் ஒருவித பதற்றம் நிலவுகிறது. இருப்பினும், ஐசிசி இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்த ஒரு அலசல் இதோ:
டி20 உலகக்கோப்பை புள்ளிவிவரங்கள் (2007 – 2024)
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த தொடர்கள் வரை இந்தியா விளையாடிய 52 போட்டிகளில் 35-ல் வெற்றி பெற்றுள்ளது. தோல்வியடைந்தது வெறும் 15 போட்டிகளில் மட்டுமே. ஒரு போட்டி டிராவிலும், மற்றொன்று முடிவின்றியும் முடிந்தது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 70.58% ஆக உள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் அணி 51 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 19 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளன. அவர்களின் வெற்றி சதவீதம் 58.82% மட்டுமே.
மோதல் தவிர்க்கப்பட்டால் பாகிஸ்தானுக்குப் பேரிடி!
பாகிஸ்தான் அரசு இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி விளையாட வராமல் போனால், விதிமுறைப்படி இந்திய அணிக்கு நேரடி 2 புள்ளிகள் வழங்கப்படும். இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். அவர்களின் ‘நெட் ரன் ரேட்’ கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, குரூப் சுற்றிலேயே தொடரை விட்டு வெளியேறும் அபாயமும் ஏற்படும்.
பரபரப்பான இந்தச் சூழலில், கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தியா-பாகிஸ்தான் மைதானத்தில் மோதுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.