சீன எல்லைக்கு அருகே இந்தியாவின் அதிரடி திட்டம் ராணுவ பலத்தை உயர்த்தும் பிரம்மாண்ட அணை

அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் லோஹித் ஆற்றின் குறுக்கே 1,200 மெகாவாட் திறன் கொண்ட கலாய்-II நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 14,176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஎச்டிசி இந்தியா லிமிடெட் மூலம் உருவாக்கப்படும் இந்த திட்டம், ஆற்றின் இயற்கையான ஓட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமைகிறது. சுமார் 78 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக 869 ஹெக்டேர் வனப்பகுதி பயன்படுத்தப்படும். அதேவேளையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காடுகளை பராமரிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சீன எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த அணை, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதோடு ராணுவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆற்றின் நீர் வரத்தை கட்டுப்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவும். இந்த திட்டத்தின் மூலம் புதிய சாலைகள், பாலங்கள் அமைக்கப்படுவதால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், எல்லைப் பாதுகாப்பும் பலப்படும். மேலும், இப்பகுதி மக்களின் நலனுக்காக இரண்டு புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.