குளிர்காலத்தில் சுங்கக் கட்டணம் ரத்தாகுமா? காற்று மாசைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை

டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலவும் கடும் காற்று மாசைக் குறைக்க, அடுத்த ஆண்டு முதல் அக்டோபர் 1 முதல் ஜனவரி 31 வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் குறைவது காற்று மாசைக் குறைக்க உதவும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். மேலும், கட்டுமானத் தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாசுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நீதிமன்றம், குழந்தைகளின் நலன் கருதி குளிர்கால விடுமுறையை முன்கூட்டியே அறிவிப்பது குறித்து பரிசீலிக்கக் கூறியது. தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை குறித்து மாநில அரசுகள் அடுத்த விசாரணையின்போது நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.