கால்பந்து உலகக்கோப்பை வெற்றியாளருக்குக் காத்திருக்கும் கோடிக்கணக்கான பரிசுத்தொகை

அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இம்முறை 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடருக்காக பிபா சுமார் 6,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 451 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 297 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கு முறையே 261 கோடி மற்றும் 243 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மற்ற அணிகளுக்கும் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 5 முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 171 கோடி ரூபாயும், 9 முதல் 16 இடங்களுக்கு 135 கோடி ரூபாயும் வழங்கப்படும். தொடக்கச் சுற்றில் வெளியேறும் அணிகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும் வகையில் பிபா திட்டமிட்டுள்ளது. கால்பந்து வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.