கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு அஜீம் ரஃபீக் கடும் கண்டனம்

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலம் எடுத்தது தொடர்பாக சுனில் கவாஸ்கர் வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கும் ஊதியம் மறைமுகமாக இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளுக்கு உதவும் என கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்தானது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கவாஸ்கரின் இந்த கருத்தை பாகிஸ்தான் வம்சாவளி வீரர் அஜீம் ரஃபீக் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். கவாஸ்கர் எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அவரது இத்தகைய கருத்துக்கள் அபத்தமானவை என்றும் அவற்றை ஏற்க முடியாது என்றும் ரஃபீக் சாடியுள்ளார். மேலும், இத்தொடரில் வர்ணனையாளராக இருக்கும் கவாஸ்கர், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் ஏன் வர்ணனை செய்வதைத் தவிர்க்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.