ஏஐ சாட்பாட் குரோக் மூலம் ஆபாச உள்ளடக்கம் பரவுவதை தடுக்க மத்திய அரசு எக்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு

எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘குரோக்’ (Grok) எனும் ஏஐ கருவி தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பெண்கள் மற்றும் பயனர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் செயல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது. போலிக் கணக்குகள் மூலம் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் நடப்பது ஐடி சட்டங்கள் 2000 மற்றும் 2021-ன் படி விதிமீறல் என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
பெண்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குரோக் ஏஐ பயன்படுத்தப்படுவது அந்தத் தளத்தின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைச் சிதைத்து ஆபாசமாக வெளியிடுவதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எக்ஸ் நிறுவனம் விரைவில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.