உலக சாதனையை முறியடித்து தீப்தி சர்மா அபாரம் இனி ஜூலன் கோஸ்வாமியின் சாதனையே இலக்கு

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் தனது 152வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட்டை அவர் முந்தினார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையையும் தீப்தி தன்வசப்படுத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 335 விக்கெட்டுகளை எடுத்துள்ள தீப்தி இப்போது ஜூலன் கோஸ்வாமியின் 355 விக்கெட் சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார். கேத்தரின் ஸ்கைவர் பிரண்ட்டின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. ஷஃபாலி வர்மா தொடர் நாயகி விருது வென்ற இந்த தொடருக்குப் பிறகு தீப்தி சர்மா அடுத்து நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக களம் காணவுள்ளார்.