உலகிலேயே முதன்முறையாக ராம்ஜெட் தொழில்நுட்ப பீரங்கி குண்டுகளை பயன்படுத்தப்போகும் இந்திய ராணுவம் 50 சதவீத கூடுதல் இலக்கு

இந்திய ராணுவம் தனது 155 மிமீ பீரங்கிகளில் ராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலக இராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைக்கவுள்ளது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த உள்நாட்டு தொழில்நுட்பம், பீரங்கி குண்டுகளின் இலக்கை தாக்கும் தூரத்தை 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும். தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தனுஷ் மற்றும் எம்-777 போன்ற அனைத்து 155 மிமீ பீரங்கிகளிலும் இந்த புதிய வகை குண்டுகளை பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
இந்த முன்னெடுப்பு பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ‘ஆத்மநிர்பார்’ கனவை நனவாக்குகிறது. 2013-ல் இருந்த வெடிபொருள் பற்றாக்குறையை கடந்து, தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் நீண்ட கால போரை எதிர்கொள்ளும் திறனை இந்தியா பெற்றுள்ளது. ஏவுகணைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த ராம்ஜெட் தொழில்நுட்பம், இனி இந்திய பீரங்கிகளுக்கு கூடுதல் வேகம் மற்றும் துல்லியமான தாக்குதல் நடத்தும் வலிமையை வழங்கும்.