இனி ரயிலில் சாப்பாட்டு கவலை வேண்டாம்! உங்கள் சீட்டுக்கே வரும் சூடான உணவு: IRCTC-யின் அதிரடி ‘ஈ-பான்ட்ரி’ சேவை

ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி! பயணத்தின் போது உணவு கிடைப்பதில் உள்ள சிரமங்களை போக்க, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ‘ஈ-பான்ட்ரி’ (e-Pantry) என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவை முன்கூட்டியே முன்பதிவு செய்து, பயணத்தின் போது தங்கள் இருக்கையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். தற்போது 25 முக்கிய ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த வசதி?
டிக்கெட் கட்டணத்தில் உணவு சேர்க்கப்படாத ரயில்கள் மற்றும் பான்ட்ரி கார் (Pantry Car) வசதி இல்லாத ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு இந்த சேவை ஒரு வரப்பிரசாதமாகும்.
ஆர்டர் செய்வது எப்படி?
- முன்பதிவு: IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே ‘ஈ-பான்ட்ரி’ விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். கன்பார்ம் (Confirm) அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.
- சரிபார்ப்பு குறியீடு (MVC): உணவை ஆர்டர் செய்தவுடன், பயணிகளின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு ‘மீல் வெரிஃபிகேஷன் கோடு’ (MVC) அனுப்பப்படும்.
- டெலிவரி: ரயில் பயணத்தின் போது, டெலிவரி ஊழியரிடம் இந்த குறியீட்டைக் காண்பித்து சூடான மற்றும் தரமான உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய ரயில்கள் மற்றும் ரீஃபண்ட் வசதி
ஒருவேளை ஆர்டர் செய்த உணவு வழங்கப்படாவிட்டால், பயணிகள் அதற்கான பணத்தைத் திரும்பப் பெற (Refund) உரிமை உண்டு. விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது சுதந்திர சேனாணி எக்ஸ்பிரஸ், ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ், கர்நாடகா சம்பர்க் கிராந்தி, மங்களாதீப் எக்ஸ்பிரஸ், கலிங்க உட்கல் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், பச்சிம் எக்ஸ்பிரஸ் மற்றும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 25 ரயில்களில் செயல்பாட்டில் உள்ளது.