இந்திய சட்டங்கள் செல்லாத ஹிமாச்சல பிரதேசத்தின் மர்ம கிராமம் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வினோதம்

இமாச்சலப் பிரதேசத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம், உலகின் பழமையான ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. தங்களை மாவீரன் அலெக்சாண்டரின் வாரிசுகளாகக் கருதிக்கொள்ளும் இந்த மக்கள், இந்திய அரசியலமைப்பையோ அல்லது காவல்துறையையோ மதிப்பதில்லை. இவர்களுக்கென்று 11 உறுப்பினர்களைக் கொண்ட தனி நாடாளுமன்றம் உள்ளது. இங்குள்ள ‘ஜம்கட்டு’ தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் தீர்ப்புகளே இறுதியானவை. ஒரு குற்றத்தை நிரூபிக்க ஆடுகளுக்கு விஷம் கொடுத்து சோதிக்கும் வினோத பழக்கமும் இங்கு இன்றும் தொடர்கிறது.
இந்த கிராமத்தில் வெளிநபர்கள் உள்ளூர் மக்களையும் அவர்களின் வீடுகளையும் தொடுவதற்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்களை தூய்மையானவர்களாகக் கருதும் இவர்கள், யாராவது தவறுதலாகத் தொட்டால் 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கின்றனர். கடைகளில் பொருட்களை நேரடியாகக் கையில் கொடுக்காமல் தரையில் வைக்கும் நடைமுறை இங்குள்ளது. இரவு 8 மணிக்கு மேல் நடமாடத் தடை மற்றும் பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு என பல கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த ஊரில் இணைய வசதி முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.