அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பும் சேவ் அமெரிக்கா சட்டம் மற்றும் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ‘சேவ் அமெரிக்கா சட்டம்’ தொடர்பாக குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மசோதாவை தேசிய வாழ்வாதாரப் போராட்டமாகக் குறிப்பிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், வாக்காளர் குடியுரிமை தொடர்பான இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை வேறு எந்த மசோதாவிலும் கையெழுத்திட மாட்டேன் என அறிவித்துள்ளார். இச்சட்டம் வாக்களிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்குவதுடன், தபால் வாக்குகளுக்கு கடுமையான தடைகளை விதிக்கவும் பரிந்துரைக்கிறது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் சுமார் 2.13 கோடி குடிமக்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக கறுப்பினத்தவர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் கோடிக்கணக்கான அமெரிக்கப் பெண்களுக்கு ஆவணச் சிக்கல்கள் எழக்கூடும். தற்போது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா செனட்டில் முடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சட்டப் போராட்டம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.