ஹசீனாவுக்குப் பிறகு யாருக்கு மகுடம்? 12 கோடி வாக்காளர்களின் தீர்ப்பால் மாறப்போகுது வங்கதேசத்தின் தலைவிதி!

வங்கதேசத்தில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு நாளை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிந்தைய இந்தத் தேர்தலில், மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவாமி லீக் இல்லாத இந்தத் தேர்தலில், பிரதானமாக பிஎன்பி (BNP) மற்றும் ஜமாஅத் கூட்டணிகளுக்கிடையிலான போட்டி, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்க உள்ளது.
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 9.5 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், ‘ஆபத்தானவை’ என அடையாளம் காணப்பட்ட 24 ஆயிரம் வாக்குச்சாவடிகள் குறித்து வாக்காளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. 12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், இம்முறை புதிதாக இணைந்துள்ள 3.58 சதவீத இளைஞர்களின் பங்களிப்பு ஜனநாயகத்தை எந்தளவுக்கு வலுப்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரியவரும்.
இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றமாக மட்டும் இல்லாமல், நாட்டில் உண்மையான அமைதியையும் புதிய அரசியலமைப்பின் நன்மைகளையும் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.