ஸ்மிருதி மந்தனாவிற்கு பதில் இந்திய அணியில் களமிறங்கிய 17 வயது தமிழக வீராங்கனை ஜி கமலினி

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, 17 வயது இளம் வீராங்கனை ஜி கமலினி இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். மதுரையைச் சேர்ந்த இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்டரான இவர், சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 1.60 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார்.
சிறு வயதில் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த கமலினி, தனது சகோதரனைப் பார்த்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டார். மகளின் கனவிற்காக அவரது தந்தை தனது போக்குவரத்துத் தொழிலை கைவிட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற கமலினி, 16 வயதிலேயே டபிள்யூபிஎல் தொடரில் அறிமுகமாகி சாதனை படைத்தார். இன்று இந்திய தேசிய அணியில் இடம்பிடிப்பதன் மூலம் தனது தந்தையின் நீண்ட கால கனவை நிஜமாக்கியுள்ளார் இந்த இளம் சாதனையாளர்.