வெளிநாடு சென்று திரும்புவோருக்கு ஜாக்பாட் இனி 75 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினால் வரி செலுத்தத் தேவையில்லை

வெளிநாடு செல்லும் இந்தியப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சுங்க வரி விதிகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. ‘பயணப் பொருட்கள் விதிகள் 2026’-ன் கீழ் இனி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் 75,000 ரூபாய் வரையிலான பொருட்களை எவ்வித சுங்க வரியுமின்றி கொண்டு வரலாம். இதற்கு முன்பு இந்த வரம்பு 50,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய விலைவாசியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி பொருட்கள் கொண்டு வரப்பட்டால் கூடுதல் தொகைக்கு மட்டுமே வரி வசூலிக்கப்படும்.
தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களுக்கும் இந்த புதிய விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஆண்கள் 20 கிராம் மற்றும் பெண்கள் 40 கிராம் வரையிலான தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வர அனுமதி உண்டு. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு மடிக்கணினியை (Laptop) வரி இல்லாமல் கொண்டு வரலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வரி விலக்கு வரம்பும் 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை தரை, கடல் அல்லது வான் வழியாக வரும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்.