வங்கதேச தேர்தல் ரத்தக் களம்: தேயிலைத் தோட்டத்தில் இந்து இளைஞர் படுகொலை!

வங்கதேச தேர்தல் ரத்தக் களம்: தேயிலைத் தோட்டத்தில் இந்து இளைஞர் படுகொலை!

வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், சில்ஹெட் பகுதியில் உள்ள சம்பாரா தேயிலைத் தோட்டத்தில் சிறுபான்மையின இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 28 வயதான ரத்தன் சாகுகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கமல்யஞ்ச் காவல்துறையினரின் தகவல்படி, ரத்தன் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார்; இன்று காலை உள்ளூர் மக்கள் தோட்டத்தில் அவரது உடலைப் பார்த்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

ரத்தனின் தாத்தா லட்சுமண் கூறுகையில், “இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை, காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட செய்திதான் வந்தது” என கண்ணீருடன் தெரிவித்தார். ரத்தனின் உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது, அவர் வேறு எங்கோ கொல்லப்பட்டு பின்னர் உடல் தேயிலைத் தோட்டத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தேர்தல் வன்முறையோடு இணைத்து உள்ளூர் மக்கள் பார்க்கின்றனர். இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே சிறுபான்மையின இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சமீபத்தில் மைமன்சிங்கில் 62 வயது இந்து வியாபாரி கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இதுகுறித்து மௌனம் காத்து வரும் நிலையில், தேர்தல் நாளன்று நடந்துள்ள இந்தப் படுகொலை அந்நாட்டு சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற உணர்வையும், அச்சத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *