மன அழுத்தத்தை குறைக்க சிகரெட் பிடிக்கிறீர்களா அதுவே உங்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்தைக் குறைக்க பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுகின்றனர். சிகரெட்டில் உள்ள நிகோடின் மூளையில் டொபமைனை சுரக்கச் செய்து தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், அது நிரந்தரத் தீர்வல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிகோடினின் தாக்கம் குறையும் போது, அது பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் மேலும் அதிகரித்து ஆபத்தான அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கிறது.
நீண்ட கால புகைப்பிடித்தல் மூளையின் செயல்பாட்டைப் பாதிப்பதோடு, உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி மனச்சோர்வை உண்டாக்குகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, மன அழுத்தத்தைக் குறைக்க புகைப்பிடிப்பதற்குப் பதிலாக உடற்பயிற்சி, தியானம், ஆழ்ந்த உறக்கம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பேசுவது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமே உண்மையான மன அமைதியைப் பெற முடியும்.