மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் முக்கிய துறைகளில் 40 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி நியமனம்

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சுசிந்திர மிஸ்ரா வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளராகவும், லவ் அகர்வால் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தலைமை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, பல பதவிகள் கூடுதல் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு, முக்கிய துறைகளில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றத்தின் கீழ், ரவீந்திர குமார் அகர்வால் இந்திய உணவுச் கழகத்தின் (FCI) தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார். அனிதா சி மேஷ்ரம் குடியரசுத் தலைவர் செயலகத்தின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் நாகுலபள்ளி ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராகவும், சாலமன் ஆரோக்கியராஜ் அமைச்சரவை செயலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.