புத்தாண்டு இரவில் ஆன்லைன் டெலிவரி சேவை முடங்கும் அபாயம் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

டிசம்பர் 31 அன்று நாடு முழுவதும் உள்ள டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது உணவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறைந்த ஊதியம், பணிச்சுமை மற்றும் சமூக பாதுகாப்பின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அமேசான், ஸ்விக்கி, ஜொமாட்டோ மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் மெட்ரோ நகரங்களில் சேவைகள் ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிவரி இலக்குகளை அடைய ஊழியர்கள் கடும் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டிற்கு இடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிதி ஆயோக் அறிக்கையின்படி கோடிக்கணக்கான கிக் தொழிலாளர்கள் நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கான முறையான தரவுத்தளம் அல்லது பொருளாதார பாதுகாப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நியாயமான ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டம் ஆன்லைன் வர்த்தக துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு மற்றும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.