தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரகசிய தகவல்கள் குறித்த ‘தேவையற்ற ஆர்வம்’ மற்றும் கோப்புகள் பொதுவெளியில் வெளியாவது நிர்வாகப் பணிகளின் வேகத்தை குறைப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் கொள்கை முடிவுகள் குறித்த வரைவு குறிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உள்விவாதங்களை இந்தச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்க அரசு முயல்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ஊழலை மறைக்கவும், வெளிப்படைத்தன்மையை சீர்குலைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆர்டிஐ விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் இந்த முயற்சி பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.