டெஸ்லா நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு உலகிலேயே முதலிடத்தை பிடிக்கிறது சீன நிறுவனமான பிஒய்டி

மின்சார வாகனச் சந்தையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதலிடத்தை சீன நிறுவனமான பிஒய்டியிடம் (BYD) இழக்கும் நிலையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டின் விற்பனை புள்ளிவிவரங்களின்படி, பிஒய்டி நிறுவனம் நவம்பர் இறுதிக்குள் 20.7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு நேர்மாறாக, டெஸ்லா நிறுவனம் செப்டம்பர் வரை 12.2 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவில் மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகள் நிறுத்தப்பட்டதே டெஸ்லாவின் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சீன சந்தையில் கடும் போட்டிகள் நிலவினாலும், பிஒய்டி நிறுவனம் சர்வதேச அளவில் தனது உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்தி வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கணிசமாக குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பிஒய்டி நிறுவனத்தின் மலிவான விலை மற்றும் சீனா வழங்கும் மானியங்கள் அந்த நிறுவனத்தை உலக சந்தையில் முன்னிலைப்படுத்தியுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள 2025 ஆம் ஆண்டின் இறுதி முடிவுகள் மின்சார வாகன உலகில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.