டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 19 சதவீதம் சரிவு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஈரான் உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால், இரண்டு வார காலத்திற்குத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சாதகமான சூழலால், ஒரு நாள் முன்னதாக பீப்பாய் ஒன்றுக்கு 116 டாலராக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் விலை, தற்போது 91 டாலராகக் குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 21.3 டாலர் சரிந்து, 19 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல், வளைகுடா நாடுகளின் பிரென்ட் கச்சா எண்ணெய் விலையும் 15 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 92.82 டாலராக வர்த்தகமாகிறது. முன்னதாக நிலவிய போர் அச்சம் காரணமாக மார்ச் மாதத்தில் எண்ணெய் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானிடமிருந்து 10 அம்ச அமைதி முன்மொழிவு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இது நீண்டகால அமைதிக்கான ஒரு முக்கிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானும் தங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் பதிலடி கொடுப்பதைக் கைவிடுவதாக உறுதியளித்துள்ளது. இந்த இராஜதந்திர நகர்வுகளால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.