சிறுமி பலாத்கார வழக்கில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு தண்டனை இல்லை என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஐந்தரை வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளியின் மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அவனது தாயை வழக்கிலிருந்து விடுவித்தது. தனது ‘ராஜா மகனை’ (Raja Beta) காப்பாற்ற ஒரு தாய் எடுக்கும் முயற்சிக்கு தண்டனை வழங்க இந்திய சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆதாரங்களை மறைக்க முயன்ற தாயின் செயல் கண்டிக்கத்தக்கது என்றாலும், அது சட்டப்படி குற்றமாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஒரு தாய் தனது மகன் எத்தகைய தவறு செய்தாலும் அவனைப் பாதுகாக்கவே நினைக்கிறாள் என்றது. இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என்றும், ஆதாரங்களை அழிக்க முயன்ற பதற்றத்தில் நடந்த கொடூரம் என்றும் நீதிமன்றம் கருதியது. குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.