சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிசிசிஐ விருது பெறுகிறார் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வழங்கும் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மார்ச் 15-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள ‘நமன் விருதுகள்’ வழங்கும் விழாவில் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் மற்றும் தலைமைப் பண்பிற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த ஒரே ஆண்டில் ஏழு சதங்களுடன் மொத்தம் 1,764 ரன்களைக் குவித்து கில் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரட்டை சதத்துடன் 754 ரன்களும், ஐபிஎல் போட்டிகளில் 650 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி வரும் வேளையில், பிசிசிஐ-யின் இந்த உயரிய விருது அவருக்குக் கூடுதல் மகுடமாக அமைந்துள்ளது.