கொசுவத்தி சுருளால் ஏற்பட்ட பயங்கரம் தூக்கத்தில் போர்வையில் தீப்பிடித்து 9 வயது சிறுவன் பலி

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் கொசுவத்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அனில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தூங்கும்போது கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவத்தி சுருளை ஏற்றி வைத்துள்ளார். நள்ளிரவில் சிறுவனின் போர்வை எதிர்பாராதவிதமாக எரியும் சுருளின் மீது விழுந்ததில் தீ மளமளவென பரவியது. பலத்த தீக்காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
வீடுகளில் கொசுவத்தி சுருள்களை கவனக்குறைவாகப் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு கொசுவத்தி பயன்படுத்துவது நச்சுப் புகையை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க தூங்கும் முன் சுருளை அணைப்பது அல்லது படுக்கையில் இருந்து தூரத்தில் வைப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.