குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்து தூங்குவது ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீமையா

குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்து தூங்கும் பழக்கம் பலருக்கு உண்டு. மருத்துவ ரீதியாக இதற்கு ‘வாசோடைலேஷன்’ என்று பெயர், இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இதன் மூலம் மூளைக்கு ஓய்வுக்கான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, விரைவாகவும் ஆழ்ந்தும் தூக்கம் வரும். குறிப்பாக இரத்த ஓட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கும், நள்ளிரவில் கால்களில் பிடிப்பு ஏற்படுபவர்களுக்கும் சாக்ஸ் அணிந்து தூங்குவது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
பாத வெடிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் தடவி சாக்ஸ் அணிவது நல்ல பலனைத் தரும். இருப்பினும், மிகவும் இறுக்கமான அல்லது செயற்கை இழை (Synthetic) சாக்ஸ்களைத் தவிர்ப்பது அவசியம். இவை இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதுடன், பாதங்களில் பூஞ்சை தொற்று ஏற்படவும் காரணமாகலாம். எனவே, பருத்தி அல்லது கம்பளியால் ஆன தளர்வான மற்றும் சுத்தமான சாக்ஸ்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. தூக்கத்தின் போது ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.