குப்பைத் தொட்டியில் ₹12 லட்சத்தின் தங்கம்! துபாய் பயணத்தில் உங்களுக்கும் இப்படி நடக்கலாமா?

துபாய்: ஒரு அழகான சுற்றுலாப் பயணம் சில நொடிகளில் துயரமாக மாற முடியுமா? குப்பை என்று நினைத்து தவறுதலாக 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வீசி எறிந்தால், யாருக்கும் அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும். காமினி கண்ணன் என்பவரது குடும்பத்தினர் தங்களது வாழ்நாள் சேமிப்பான தங்கத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்டபோது, வெளிநாட்டில் மொத்தத்தையும் இழந்துவிட்டோமே என்ற வேதனையில் தவித்தனர்.
இருப்பினும், நேர்மை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. துபாயைச் சேர்ந்த ஒரு துப்புரவுப் பணியாளர் அந்த தங்கத்தைக் கண்டெடுத்து, போலீஸ் மூலம் அக்குடும்பத்திடம் ஒப்படைத்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாடு செல்லும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் துபாயின் பாதுகாப்பு மற்றும் நேர்மையையும் இச்சம்பவம் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.