காதல் திருமணம் செய்த 24 மணிநேரத்தில் விவாகரத்து பெற்ற புனே தம்பதி

புனேவைச் சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும் ஆண் பொறியாளர் இருவர் இரண்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான 24 மணிநேரத்திற்குள்ளேயே பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாகப் பிரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவில் விவாகரத்து நடைமுறைகள் நீண்ட காலம் எடுக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி இந்த வழக்கு மிக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கப்பலில் பணிபுரியும் கணவரின் வேலை நிமித்தமான இடமாற்றம் மற்றும் எதிர்கால வாழ்க்கை முறை குறித்த கருத்து வேறுபாடே இந்த முடிவுக்குக் காரணமாகும். இருவருக்கும் இடையே எந்தவிதமான குற்றச்சாட்டுகளோ வன்முறையோ இன்றி, அமைதியான முறையில் இந்த விவாகரத்து நடந்துள்ளது. நீண்ட காலமாகக் காதலித்த போதிலும், அடிப்படை வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்து முன்கூட்டியே ஆலோசிக்காதது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.