ஐபிஎல் தொடரில் 20 கோடி ரூபாய் சம்பளம் போதுமானதல்லவா அபினவ் முகுந்தின் அதிரடி கருத்தால் சர்ச்சை

உலகின் பணக்கார கிரிக்கெட் தொடரான ஐபிஎல் வீரர்களின் ஊதிய முறை குறித்து முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். லீக்கின் ஒட்டுமொத்த வருவாயுடன் ஒப்பிடுகையில், வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்று அவர் தெரிவித்துள்ளார். பேஸ்பால் மற்றும் ஃபார்முலா 1 போன்ற சர்வதேச தொடர்களுடன் ஒப்பிடும்போது, ஐபிஎல் வீரர்கள் பெறும் 20-25 கோடி ரூபாய் பெரிய தொகையல்ல என்பது அவரது கருத்தாகும்.
ஒரு ஐபிஎல் அணி ஆண்டுக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிலையில், வீரர்களுக்காக 100 முதல் 120 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுவதாக முகுந்த் சுட்டிக்காட்டினார். இந்த ஊதிய வரம்பை 200 முதல் 250 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விளம்பர வருமானத்தை விட, லீக் வழங்கும் நேரடி ஊதியம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.