எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு போர் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீராக உள்ளதாகவும், கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே தேவையற்ற பீதியால் எரிபொருளை சேமிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாதுகாப்பு கருதி பாட்டில்கள் அல்லது கேன்களில் எரிபொருளை வாங்கி சேமிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது கடுமையான தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களில் நேரடியாக வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பாமல், அரசு அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் செயல்படுவதே தற்போதைய சூழலில் பாதுகாப்பானது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.