எகிப்து மம்மிகளின் மர்ம குகையில் தமிழ்: ‘சிகை கொற்றன்’ – உலகை வியக்க வைத்த பேராச்சரியம்!

எகிப்தின் புகழ்பெற்ற ‘மன்னர்களின் பள்ளத்தாக்கில்’ (Valley of the Kings) கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள், பண்டைய தமிழகத்திற்கும் ரோமானிய பேரரசிற்கும் இடையே இருந்த ஆழமான வணிக மற்றும் கலாச்சார தொடர்பை உலகிற்கு பறைசாற்றியுள்ளன.
பாரிஸில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் (EFEO) பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழக பேராசிரியர் இன்கோ ஸ்ட்ரூச் ஆகியோர் 2024-2025 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிப்பின் முக்கிய அம்சங்கள்:
- கல்வெட்டுகள்: சுமார் 30 தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- காலம்: இவை கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலானவை என கணிக்கப்பட்டுள்ளது.
- இடம்: தீபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
யார் இந்த ‘சிகை கொற்றன்’?
இந்த ஆய்வில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ‘சிகை கொற்றன்’ (Sikai Kotran) என்ற பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளது.
- பெயரின் பொருள்: ‘சிகை’ என்பது தலையலங்காரம் அல்லது கிரீடத்தைக் குறிக்கும். ‘கொற்றன்’ என்பது தூய தமிழ்ச் சொல், இதற்கு ‘வெற்றி பெற்றவன்’ என்று பொருள்.
- சங்க இலக்கிய தொடர்பு: சங்க இலக்கியமான புறநானூற்றில் புகழப்படும் சேர மன்னன் ‘பித்தங்கோற்றன்’ பெயரிலும் இந்த ‘கொற்றன்’ விகுதி பயின்று வருவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- பிற பெயர்கள்: ‘கோபன் பரத் கண்டன்’, ‘சாத்தன்’ மற்றும் ‘கீரன்’ போன்ற பெயர்களும் அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன. இதில் ‘கோபன்’ என்ற பெயர் தமிழகத்தின் அம்மன்கோவில்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர்களின் கருத்து:
பேராசிரியர் இன்கோ ஸ்ட்ரூச் இது குறித்து கூறுகையில், “இந்த கல்வெட்டுகளை முதன்முதலில் அடையாளம் கண்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. பல ஆண்டுகளாக பலர் இந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளனர், ஆனால் யாரும் இந்தியத் தொடர்பைக் கவனிக்கவில்லை” என வியப்புடன் தெரிவித்தார்.
தமிழக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இதுவரை எகிப்தின் துறைமுக நகரமான ‘பெரெனிகே’ (Berenike) பகுதியில் மட்டுமே ஆய்வுகள் கவனம் செலுத்தின. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு தமிழர்களின் காலடித்தடம் நைல் நதி பள்ளத்தாக்கு வரை பரவியிருந்ததை உறுதிப்படுத்துகிறது.
பண்டைய காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து சென்ற வணிகர்கள் அல்லது பயணிகள், அங்குள்ள கல்லறைகளைப் பார்வையிட்டபோது, தங்கள் வருகையைப் பதிவு செய்ய சுவர்களில் பெயர்களைச் செதுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நுழைவாயிலிலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் கூட இந்த பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பது, அன்றைய தமிழர்களின் கடல் கடந்த பயணத்தின் வீச்சை உலகிற்கு உணர்த்துகிறது.