ஊசி போடும் வலி இனி இல்லை இந்தியாவில் அறிமுகமானது இன்ஹேலர் இன்சுலின்

சர்க்கரை நோயாளிகளுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஊசிக்கு மாற்றாக சுவாசம் வழியாக உட்கொள்ளும் இன்சுலின் முறையை மும்பை மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அஃப்ரெஸா’ எனப்படும் இந்த இன்சுலின் பொடியை இன்ஹேலர் கருவி மூலம் நுரையீரலுக்குள் இழுக்கும்போது அது நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. அமெரிக்க எஃப்டிஏ மற்றும் இந்திய சிடிஎஸ்சிஓ அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற இந்த முறை ஊசி போடும் பயத்தையும் சிரமத்தையும் முற்றிலும் நீக்குகிறது.
இந்த இன்சுலின் பயன்படுத்திய 12 நிமிடங்களிலேயே வேலை செய்யத் தொடங்குவதுடன் சில மணிநேரங்களில் ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. இந்தியாவில் சுமார் 10 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ள நிலையில் டைப் 1 மற்றும் டைப் 2 பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும் அவசியம் இல்லாததால் பயணங்களின் போதும் நோயாளிகள் இந்த நவீன முறையை எளிதாகப் பயன்படுத்த முடியும்.